Published : 18 Jul 2021 03:16 AM
Last Updated : 18 Jul 2021 03:16 AM
போளூர் அருகே மணல் கடத்தல் தொடர்பாக காவல் துறையினர் மூலம் விரட்டி செல்லப்பட்ட இளைஞர், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் பேட்டை தொகுப்பு பகுதியில் வசித்தவர் விவசாயி முரளி(30). இவர், தன்னிடம் உள்ள மாட்டு வண்டி மூலம் செய்யாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், களம்பூர் காவல் துறையினர் முரளி வீட்டுக்கு கடந்த 15-ம் தேதி சென்றுள்ளனர். அப்போது தப்பியோடிய முரளியை காவல் துறையினர் விரட்டி சென்றுள்ளனர்.
மேலும், வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த 2 மாட்டு வண்டிகளை, பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் மூலம் விரட்டி செல்லப்பட்ட முரளி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்நிலையில், வம்பலூர் கிராமம் அருகே உள்ள ஆற்றுப் படுகையில் முரளியின் உடல் உயிரிழந்த நிலையில் கிடப்பது, அவரது உறவினர் மற்றும் கிராம மக்களுக்கு நேற்று முன்தினம் மாலை தெரிய வந்தது. அவர்கள், வம்பலூருக்கு திரண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட காவல்கண் காணிப்பாளர் பவன்குமார் தலைமையிலான காவல் துறை யினர் விசாரணை நடத்தினர்.
மேலும், முரளியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர் மற்றும் கிராம மக்கள், காவல்துறையினர் விரட்டி சென்று தாக்கியதால் முரளி உயிரிழந்துவிட்டாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். காவல்துறையினர் வாகனத்தை மறித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது, உரிய விசாரணை நடத்தி தவறு நடைபெற்றுள்ளது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உறுதி அளித்ததன் பேரில், முரளியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் சம்மதித்தனர்.
இதுகுறித்து முரளியின் மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் போளூர் காவல்துறையினர் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT