Published : 17 Jul 2021 03:13 AM
Last Updated : 17 Jul 2021 03:13 AM
கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகேசன் (38). பனியன் நிறுவன தொழிலாளியாக இருந்தார். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு அருகே, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மாணிக்கம் (35) என்பவர், குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த வந்தார்.
இந்நிலையில் மாணிக்கத்தின் மனைவிக்கும், முருகேசனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுவிரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 ஜூன் 29-ம் தேதி, முருகேசன் வீட்டில் இருந்தபோதுமாணிக்கம், அவரது தந்தை பிச்சை (65), தாயார் இந்திராணி (53), உறவினர் சத்யராஜ் (34), நண்பர்கள் கரட்டாங்காட்டை சேர்ந்த ரகுவரன் (37), வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் அரிவாள், கத்தி, மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்து முருகேசனை வெட்டி கொலை செய்தனர்.
முருகேசன் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் திருப்பூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிந்து மாணிக்கம், சத்யராஜ், ரகுவரன், சுரேஷ், பிச்சை, இந்திராணி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம், வீடு புகுந்து தாக்கிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதம், கொடிய ஆயுதங்களை பயன்படுத்திய குற்றத்துக்காக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் 6 பேரும் அனுபவிக்கவேண்டும் என்று, நீதபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ரூபன் ஆஜரானார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் 6 பேரும் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT