Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் - காஞ்சியில் ரூ.8 கோடி நலத்திட்ட உதவி வழங்கல் :

காஞ்சிபுரத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் 787 பயனாளிகளுக்கு ரூ.8.02 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசியது:

பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு அதில் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதிவு செய்யப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக கடந்த மார்ச் 3-ம் தேதி ரூ.12.25 கோடி மதிப்பில் 794 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று 787 பயனாளிகளுக்கு ரூ.8.02 கோடியில் 165 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 355 பேருக்கு முதியோர் உதவித் தொகை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 31 இடங்களில் சாலை வசதி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) னிவாச ராவ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x