Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
திருச்சி/ கரூர்/ அரியலூர்/ தஞ்சாவூர்
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சைக்கிள் பேரணி நடத்தினர்.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாசல மன்றத்தில் இருந்து கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவகர் தலைமையில் நேற்று சைக்கிள் பேரணி தொடங்கியது. இப்பேரணியில், மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர்கள் எம்.சரவணன், ஜி.கே.முரளி, வழக்கறிஞர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எல்.ரெக்ஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேரணியின்போது, காலி சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலையிட்டு, சைக்கிளில் எடுத்துச் சென்றனர். தெப்பக்குளம் அஞ்சல் நிலையம் அருகே வந்தபோது, பேரணியை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசைக் கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 4 பெண்கள் உட்பட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி செ.ஜோதிமணி தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி முன்னிலை வகித்தார். கரூர் வடக்கு நகரத் தலைவர் ஆர்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா தொற்று காலத்தில் மக்கள் உயிருக்கும், வாழ்வாதாரத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் சூழலிலும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட 50 சதவீதம் குறைவாக விற்கப்பட்டு வரும் நிலையிலும், ரூ.36 கலால் வரி விதித்து, பெட்ரோல், டீசல், காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றார்.
இதேபோல, தாந்தோணிமலை காந்தி சிலை முன் முன்னாள் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறவிருந்த சைக்கிள் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சின்னையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அருள் பாண்டியன், வட்டாரத் தலைவர்கள் ஆண்டிமடம் பாலு, மேகநாதன், நகரத் தலைவர்கள் மணிகண்டன், அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற சைக்கிள் பேரணியை மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். சிதம்பரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு தொடங்கிய பேரணி நான்கு சாலை, கும்பகோணம் சாலை, அண்ணா சிலை வழியாகச் சென்று, காந்தி பூங்காவில் நிறைடைந்தது.
தஞ்சாவூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணிக்கு, மாநகர் மாவட்டத் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச் செயலாளர் சி.கே.பெருமாள், வட்டாரத் தலைவர்கள் முத்து, மோகன்தாஸ், கண்ணன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் சித்ரா, கலைச்செல்வி, மாநகர நிர்வாகிகள் எஸ்.கே.சிதம்பரம், ஜேம்ஸ், தங்கராசு, பொருளாளர் பழனியப்பன், லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணி தஞ்சாவூர் கரந்தை, கீழவாசல், ரயிலடி, மணிமண்டபம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment