Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

பொது போக்குவரத்து தொடங்கிய நிலையில் - சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரி மாவட்டத்தில் அதிகரிப்பு :

உதகை

நீலகிரி மாவட்டத்தில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. கடந்த 5-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், கரோனா பரவலை தடுக்க சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதகைக்கு சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் நிறுத்திவிட்டு, நடந்து சென்று தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

உதகை தொட்டபெட்டா மலைச்சிகரத்துக்கு செல்லும் சந்திப்பு பகுதியில், சுற்றுலா பயணிகள் வரிசையாக கார்களில் வந்து இறங்கினர். அங்கு சோதனைச்சாவடி மூடப்பட்டிருந்ததால், மலைச்சிகரத்தை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். சாலையில் நின்றவாறு வனப்பகுதியின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கோத்தகிரி சாலையில் செல்லும்போது பசுமையான தேயிலை தோட்டங்களை பார்வையிட்டனர். உதகை படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஊரடங்குக்கு பின்னர் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டதால், உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறும்போது, "உதகையில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடியும், இயற்கை காட்சிகளை ரசித்தபடியும் செல்கிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x