Published : 10 Jul 2021 03:16 AM
Last Updated : 10 Jul 2021 03:16 AM
வாணியம்பாடியொட்டியுள்ள வனப்பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் பாலாற்று பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திரஎல்லைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆந்திர மாநிலத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயிலையொட்டி ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெளியேறியது. இதனால், வாணியம்பாடி, அம்பலூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், பெரும்பள்ளம், கொடையாஞ்சி ஆகிய பகுதிகளில் உள்ள மண்ணாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலைவரை விடிய, விடிய கனமழை பெய்ததால் புல்லூர் தடுப்பணை முழுமையாக நிரம்பி அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் பாலாற்றில் பெருவெள்ளமாக மாறி ஓடியது.
திம்மாம்பேட்டை, அலசந்தராபுரம், நாராயணபுரம், ராமநாயக் கன்பேட்டை, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள மண்ணாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அம்பலூர் தரைப்பாலம் இருபுறமும் தொட்டவாறு தண்ணீர் செல்வதால் அந்த பாலம் முழுமையாக மூடியது. இதனால், அங்கு போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை பொதுமக்கள் கற்பூரம் ஏற்றியும், மலர் தூவியும் வரவேற்றனர்.
புல்லூர் தடுப்பணையில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் திம்மாம்பேட்டை மண்ணாற்றை யொட்டியுள்ள விவசாய நிலங்களில் சூழ்ந்தன. இதனால், அங்கு பயிரிடப்பட்ட வாழை, தென்னை, நிலக்கடலை, பப்பாளி, மா, கொய்யா உள்ளிட்ட பயிர் வகைகள் மழைநீரில் மூழ்கி சேதமானதாக விவசாயிகள் வேதனை யடைந்தனர்.
வாணியம்பாடியில் இரவு முழுவ தும் பெய்த கனமழையால் உதயேந் திரம், அம்பலூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம் உள்ளிட்ட கிராமங் களில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல, பாலாற்றை யொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அம்பலூர் தரைப் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, பாலாற்றையொட்டி வசிக்கும் பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
அதேபோல, திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்ததால் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் நேற்று ஆர்ப்பரித்து கொட்டியது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பதிவான மழையளவு விவரம்: ஆலங்காயம் 72 மி.மீ., ஆம்பூர் 45, வடபுதுப்பட்டு 44.2, நாட்றாம்பள்ளி 70.6, கேத்தாண்டப்பட்டி 73, வாணியம் பாடி 64, திருப்பத்தூர் 55.50 மி.மீ., என மொத்தமாக 424.30 மி.மீ., அளவு மழையளவு பதிவாகியிருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT