Published : 09 Jul 2021 03:13 AM
Last Updated : 09 Jul 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டத்தில் 19 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு சார்பில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாளுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங் சாய், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் அம்பிகா, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஜெகதீசன், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் புனிதா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் கோமகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 19 காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவி மைய காவல்அலுவலருக்கும், ஒரு மடிக்கணினி, இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகார்களை தொடர்புகொண்டு, முதற்கட்ட குறைதீர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வழக்கு நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கான உதவி தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கான உதவி தொலைபேசி எண் 1098 ஆகியவற்றுடன் கூடிய பதாகையை ஏந்தி மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT