Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM

மேகேதாட்டு அணை விவகாரத்தில் - தமிழக அரசின் பக்கம் காங்கிரஸ் நிற்கும் : கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

சிவகங்கை

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ், தமிழ்நாடு அரசின் பக்கமே இருக்கும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மகளிர் காங்கிரஸ் சார்பில் சிவகங்கை அரண்மனைவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏலம்மாள் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வித்யா கணபதி முன்னிலை வகித்தார். கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்டத் தலைவர் சத்யமூர்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்களையும் மதித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்தினால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் பிரச்சினையில் தீர்வு கிடைக்கும்.

மத்திய அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகாரமும் பிரதமர் கையில்தான் உள்ளது. மத்திய அமைச்சர்களை பலிகடாவாக்குவதுதான் இந்த அரசின் வழக்கம். தேசிய கட்சிகளுக்கு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட கருத்துகள் இருப்பதில் எந்த தவறும் இல்லை. மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பக்கமே காங்கிரஸ் இருக்கும்.

ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில் வில்லங்கம் உள்ளது. இந்த சட்டத்தில் ஏற்கெனவே தணிக்கை செய்த திரைப்படத்தை மீண்டும் மத்திய அரசு தணிக்கை செய்ய வழிவகை உள்ளது. இது ஆபத்தானது.

பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பாஜகவுக்கு பிடிக்காது. அதனை தற்போது மீண்டும் தணிக்கை செய்வார்கள். கடும் எதிர்ப்பு உள்ள நிலையில், ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x