Published : 09 Jul 2021 03:15 AM
Last Updated : 09 Jul 2021 03:15 AM
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மனு அளித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையிலான விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறப் பட்டிருப்பதாவது:
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் தற்போது 43 அடியைத் தாண்டியுள்ளது. வழக்கமாக ஜூன் மாத இறுதிக்குள் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அப்படி தண்ணீர் திறந்தால், நெல்லில் நோய் தாக்காது. உரம் அதிகம் தேவைப்படாது. மழைக்கு முன் அறுவடை முடிந்துவிடும். நல்ல மகசூலும் கிடைக்கும்.
தற்போது மாவட்டம் முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் வயலில் நாற்று விட்டு எருவை கொட்டி வருகின்றனர்.
இப்போது உள்ள தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டால், 105 நாட்களுக்கு வரும். ஆனால் எங்களுக்கு 60 நாட்களுக்கு தண்ணீர் இருந்தாலே போதும். காரணம் இன்னும் 60 நாட்களுக்குள் வழக்கமான மழை பெய்து ஆற்றில் நீர் நிரம்பி உபரியாக தண்ணீர் தேவைக்கு அதிகமாக கிடைக்கும்.
இதுவரை முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போனதாக வரலாறே இல்லை. இந்த போகத்தில் சன்னரக நெல் விளைவிக்கப்படுகிறது. எதிர்பாராத காரணத்தால் மழை வராமல் காய்ந்து போனாலும் இழப்பீடு கோரமாட்டோம் என உறுதி அளிக்கின்றோம். எனவே முதல் போக சாகுபடிக்கு உடனடியாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆவண செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT