Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
கல்குவாரியில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதுடன், காப்பீட்டு திட்டத்திலும் பதிவுசெய்ய வேண்டும் என்று குத்தகைதாரர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கல்குவாரி குத்தகைதாரர்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:
குவாரி குத்தகைதாரர்கள் குவாரிப் பணியின்போது அரசுவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான முறையில் குவாரிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கல்குவாரியில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு மற்றும் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக குவாரிகளில் வெடிப்பொருட்கள் உபயோகிக்கும் முன் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கால்நடைகள், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்தபின் வெடி பொருட்களை பயன்படுத்த வேண்டும். கல்குவாரிமற்றும் கிரஷர்களில் இருந்து கனிமங்களை கொண்டு செல்லும்போது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நீர் தெளித்து புழுதி பறக்கா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து செல்லும் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கனிமங்களை கொண்டு செல்லவும், வாகனத்தின் மேற்கூரையை தார்பாய் போட்டு மூடியவாறு கொண்டு செல்லவும் வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜலட்சுமி, பெரும்புதூர் வருவாய் கோட்ட அலுவலர் த.முத்துமாதவன், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் கே.விஜயராகவன், உதவி புவியியலாளர் மு.சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT