Published : 04 Jul 2021 03:14 AM
Last Updated : 04 Jul 2021 03:14 AM

தஞ்சை மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு - தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழையுங்கள் : பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் பூக்காரத் தெரு, பிலோமினாநகர், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 5 நாட்களாக தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாக இருந்து வருகிறது.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இயலாது. எனவே, பொதுமக்கள் உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பைத் தர வேண்டும்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டு வாயில் அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் துண்டறிக்கையில், சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அலுவலர்களின் செல்போன் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்களை தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

இந்த நடவடிக்கை ஜூலை 2-ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 150 வீடுகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்தத் தெரு முழுமையாக அடைக்கப்படும்.

இதுபோன்ற நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கரோனா மூன்றாவது அலை வந்தால், அதை எதிர்கொள்ள மாவட்டத்தில் ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, மாவட்டத்தில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

அப்போது, கோட்டாட்சியர் எம்.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் பு.ஜானகி ரவீந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்(பொறுப்பு) நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x