Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM
கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்காக 'ஸ்மைல்' கடன் திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் 'ஸ்மைல்' என்கிற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா வைரசால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை (அறை எண்.11) தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT