Published : 03 Jul 2021 03:14 AM
Last Updated : 03 Jul 2021 03:14 AM
பணியிடங்களில் ஏற்படும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து தஞ்சாவூரில் நேற்று காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமை, தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ் குமார் தொடங்கி வைத்துப் பேசியது: பணியில் சில சமயங்களில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும். அப்போது, சிலர் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்தி மேலாண்மை செய்துவிடுவர். அது, சிலருக்கு இயலாமல் போய்விடுகிறது. பணியிடங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. அதுபோன்ற சூழ்நிலையில் நம்முடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது குறித்து இப்பயிற்சி அளிக் கப்படுகிறது.
சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபடும்போது குற்றவாளிகளிடம் விசாரணை செய்வோம். சில நேரங்களில் கேட்கும் கேள்விகளுக் குக் குற்றவாளிகள் பதில் கூறுவர். குற்றவாளிகள் பதில் அளிக்காதபோது, காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். அதுபோன்ற சூழ்நிலையில் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காவல் துறையில் நன்னடத்தை முக்கியமானது. அதுபோல, பொது இடங்களில் நம் உணர்வுகளையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. எனவே, இந்தப் பயிற்சியில் கற்கும் விஷயங்களை நூறு சதவீதம் ஈடுபாட்டுடன் கடைபிடித்தால், பயன் கிடைக்கும் என்றார்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மன நல மருத்துவர்கள் கிருஷ்ணபிரியா, சரண்யா ஆகியோர் பயிற்சி அளித்தனர். கூடுதல் எஸ்.பிக்கள் ரவீந்திரன், கென்னடி ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள், ஆய்வாளர்கள் 66 பேர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT