Published : 03 Jul 2021 03:14 AM
Last Updated : 03 Jul 2021 03:14 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து 3 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 43.40 டன் நெல் மூட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலையப் பணியாளர்கள் துணையுடன் விற்பனை செய்வதால் உள்ளூரில் உள்ள விவசாயிகளின் நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் அவதிப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நெல்லை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் தனிப்படை குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடத்திய வாகன சோதனையின்போது, வெளி மாவட்டங்களில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி 2 லாரிகளில் 434 மூட்டைகளில் கொண்டு வந்த 26 டன் நெல்லையும், வல்லம் அருகே நடத்திய சோதனையில், கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து ஒரு லாரியில் 280 மூட்டைகளில் கொண்டு வந்த 17 டன் நெல்லையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 3 லாரி ஓட்டுநர்களிடம் நடத்திய விசாரணையில், வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, அவற்றை டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி ஓட்டுநர்களான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பால்பாண்டி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT