Last Updated : 01 Jul, 2021 03:15 AM

 

Published : 01 Jul 2021 03:15 AM
Last Updated : 01 Jul 2021 03:15 AM

கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் : தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர் பெருமிதம்

உடுமலை

கற்பித்தல் பணியில் புதிய முயற்சிகளை மேற்கொண்ட ஆசிரியர்களின் கூட்டு முயற்சியின் விளைவாகவே ஐசிடி விருது கிடைத்துள்ளது என உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியர் பெருமிதத்துடன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கே.பி.தயானந்த் (32). இவரது சொந்தஊர், கோவை மாவட்டம் சுந்தராபுரம். கடந்த 2012-ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெற்றி பெற்ற இவர், சிவகங்கைமாவட்டம், பூலாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசியராகதனது கல்விப் பணியை தொடங்கினார்.

2017-ம் ஆண்டு முதல்உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகபணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றிய 3 ஆண்டுகளிலும் ஆங்கிலப் பாடத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதற்கு காரணம் கற்பித்தலில் நவீன தொழில்நுட்பத்தை இவர்பயன்படுத்தியதுதான் என்கின்றனர், சக ஆசிரியர்கள். இதற்காகவே மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இவருக்கு ஐசிடி விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தயானந்த் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘நான் எம்.ஏ., பிஎட் ஆங்கில பட்டதாரி. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். கற்பித்தலில்புரஜெக்டர்கள் பயன்படுத்தி பாடம் நடத்துவது, ஸ்கைப் மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் அரசுப் பள்ளி மாணவர்களை உரையாடச் செய்வது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

ஆசிரியர்களை குழுவாக இணைத்து பாடங்களை அனிமேஷன் வீடியோக்களாகவும் உருவாக்கியுள்ளேன். அரசு பாடப் புத்தகங்களில் ‘கியுஆர்’ கோடு அச்சிடப்பட்டிருக்கும். அதனை ஸ்கேன் செய்தால் நாங்கள் உருவாக்கியுள்ள வீடியோக்கள் வரும். இவ்வாறு 170 வீடியோக்கள் உருவாக்கியுள்ளோம். இந்த விருது, எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x