Published : 01 Jul 2021 03:16 AM
Last Updated : 01 Jul 2021 03:16 AM

ராமநாதபுரத்தில் நரிக்குறவர்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் : நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவு

திருவாடானை சமத்துவபுரத்தில் நரிக்குறவர் இன மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்த ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் அருகே காட்டூரணி எம்ஜிஆர் நகர் மற்றும் திருவாடானை அருகே சமத்துவபுரம் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

காட்டூரணி நரிக்குறவர் மக்கள், தங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். பட்டா, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, சிறுதொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல, திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள், தங்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வீடு வீடாக நேரடி ஆய்வு செய்து, தகுதியான வர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அதேபோல், தகுதி யானவர்களுக்கு முதியோர், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்கப்படும். பெண்களை குழுக்களாக ஒருங்கிணைத்து சிறுதொழில் பயிற்சி வழங்கி வங்கியில் கடனுதவி பெற்றுத் தரப்படும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டம் மூலம் தகுதியான வர்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.

திருவாடானை சமத்துவ புரத்தில் உள்ள 3 நரிக்குறவப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் தெய்வேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சிவசங்கரன், வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், ஆர்.செந்தில்வேல் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x