Last Updated : 29 Jun, 2021 06:13 AM

 

Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக - 6,700 பேருக்கு திருமண நிதி உதவி வழங்கப்படவில்லை : அரசு நிதி ஒதுக்கீடு செய்ய பெண்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக பெண்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழக அரசால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்தை பணத்துடன் தாலிக்கு தங்கம் வழங்கும் வகையில் விரிவுபடுத்தினார். அதன்படி 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டதாரி மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், இதனுடன் சேர்த்து 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. பின்னர் 2016-ம் ஆண்டு தங்கம் 8 கிராமாக உயர்த்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2011 முதல் 2017 வரை 28,000 பேர் நிதி உதவியும், தாலிக்குத் தங்கமும் பெற்றுள்ளனர். ஆனால் 2018 முதல் தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பணப்பலன் பெற தகுதியுடைய 6,700 பேருக்கு திருமண நிதி உதவியும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தில் விண்ணப்பித்த பலர் குழந்தைகள் பெற்ற பின்பும் நிதியுதவி கிடைக்காமல் 3 ஆண்டுகளாக சமூக நலத் துறை அலுவலகங்களுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். உடனடியாக திருமண நிதியுத வியையும், தாலிக்குத் தங்கத்தை யும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இத்திட்டத்துக்கு கடந்த 2018 முதல் அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் திருமண நிதி உதவியும், தாலிக்குத் தங்கமும் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கியதும் உடனடியாக நிதியும், தங்கமும் வழங்கப்படும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x