Published : 28 Jun 2021 03:13 AM
Last Updated : 28 Jun 2021 03:13 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் அதிகரித்துவருகிறது. இச்சூழலில் காவல் துறை தனிப்படை அமைத்து, சாராய ஊறல்களை அழித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜியா வுல்ஹக் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் கல்வராயன்மலையின் அடிவாரத்தில் உள்ள அம்மையகரம், மூங்கில்பாடி, பாண்டியன்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீஸார் கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து, சட்டவிரோத செயலால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடம் விளக்கி வருகின்றனர். தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனையில் ஈடுபடுவோர் பற்றிய தகவல்களை காவல்துறையின் பிரத்யேக தொலைபேசி எண் 10581 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் குரும்பாலூர் கிராமத்தில் ஏழுமலை என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக் கப்பட்டிருந்த 500 கிலோ சர்க்கரை, 400 கிலோ வெல்லம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் தும்பராம்பட்டு கிராம ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், 700 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். இதேபோன்று கச்சிராயப்பாளையம் காவல்ஆய்வாளர் ப்ரியா தலைமையிலான போலீஸார் தேக்குமரத்து ஓடையில் நடத்திய சோதனையில் 3,200 கள்ளச்சாராய ஊறல் களையும், 700 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT