Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கரோனா பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலமாக ஆஷா என்ற திட்டத்தின் கீழ், சுயதொழில் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிடரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய உயிரிழந்தவரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் சுயவேலை திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம்.
திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ.ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு 6.5 சதவீதம் வட்டி விகிதத்தில், 6 ஆண்டுகளுக்குள் கடனை திரும்பச் செலுத்தலாம். பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனாவால் உயிரிழந்ததற்கான ஆவணங் களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை 0421- 2971112, 9445029552 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT