Published : 27 Jun 2021 03:13 AM
Last Updated : 27 Jun 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டத்தில் மஞ்சள் 230 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. மஞ்சள் விளைச்சல் அதிகரிப்பது தொடர்பாக, விவசாயிகளுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் க.வி.ராஜலிங்கம் மற்றும் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.ஆனந்தராஜா ஆகியோர் கூறியதாவது:
மஞ்சள் விதைத்த ஒரு மாதம் கழித்து அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரிமயா 10 கிலோ இட வேண்டும். மஞ்சள் நட்ட 20, 60, 90, 120 நாட்களில் ஒவ்வொரு முறையும் தழைச்சத்து 25 கிலோ, மணிச்சத்து 25 கிலோ, சாம்பல் சத்து 18 கிலோ கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இட வேண்டும். நுண்ணூட்டச் சத்து மேலாண்மை செய்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.
மூன்றாவது நாளில் பேஸலின் களைக்கொல்லி ஹெக்டேருக்கு 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 30-வது நாள் முதல் களையும், 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்க வேண்டும். இரண்டாவது மேலுரம், 4-வது மேலுரம் இடும்போது, மண் அணைக்க வேண்டும். மஞ்சளை இளந்தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். மஞ்சள் தோட்டங்களில் கொத்தமல்லி, வெந்தயம், வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை, அகன்ற இடைவெளியில் பயிருக்கு தக்கவாறு ஊடுபயிராக பயிரிடலாம். மஞ்சள் நடவுக்கு முன்பும், பின்பும் நடவு செய்த மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர், மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒருமுறை பாய்ச்ச வேண்டும்.
செதில் பூச்சி, இலைப்பேன், நூற்புழு தாக்குதல் உண்டு.இலைப்புள்ளி மற்றும் இலைத்தீயல் நோயால் பாதிக்கப்பட்டால், பாதிப்புக்குள்ளான இலைகளை கிள்ளி எடுத்து எரித்துவிட வேண்டும். ஹெக்டேருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு ஒன்றே கால் கிலோ அல்லது மேன்கோசெப் ஒரு கிலோ எனும் அளவில், நோய் கண்டவுடன் தெளிக்கவும். நோயின் தீவிரத்தை பொறுத்து, இரண்டு அல்லது மூன்று முறை 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். நடவு செய்த 9 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும்.
ஒரு ஹெக்டேரில் சுமார் 25 முதல் 30 டன் வரை, ஈர மஞ்சளை அறுவடை செய்யலாம். இதிலிருந்து 5 முதல் 6 டன் மெருகேற்றிய மஞ்சள் கிடைக்கும். விவசாயிகளுக்கு மேலும் சந்தேகம் இருந்தால், 04255- 296644, 04255 -296155 ஆகிய எண்களில் வேளாண் நிலையத்தை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT