Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மாடரஹள்ளி அடுத்த ஓபிலிகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரபு (30). கரோனா பாதிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக்சிஜன் அளவு குறைந்ததால் பிரபு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை 8.45 மணிக்கு பிரபு அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் மின் விநியோகம் தடைப்பட்டது.
இதனால் வெண்டிலேட்டர் பேட்டரி அளவு குறைந்து பிரபு மூச்சுவிட சிரமம் அடைந்தார். இதையடுத்து பிரபுவை, மின்வசதி கொண்ட இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் செல்லும் வழியில் பிரபுவின் கையில் இருந்த பல்ஸ் மீட்டர் செயலிழந்து நின்றதால், அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி நகர போலீஸார், அவர்களை சமாதானம் செய்தனர். பிரபுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் மதியம் 1மணிக்கு பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும், அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பிற்பகல் 2.30 மணிக்கு பிரபுவின் உடலை, குடும்பத் தினரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் கேட்ட போது பிரபுவிற்கு பேட்டரி அளவு குறையும் முன்னர், நாங்கள் வெண்டிலேட்டரை மாற்றிவிட்டோம். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT