Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM

உடுமலை அரசு மருத்துவமனையில் - சுகாதாரப் பணியாளர்களின் சம்பளம் கையாடல்? : தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது திருப்பூர் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர்

சுகாதாரப் பணியாளர்களின் மாதச்சம்பளத்தில் கையாடல் செய்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

உடுமலை சிஐடியு ஊரக வளர்ச்சிமற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.தண்டபாணி, மாவட்டச் செயலாளர் கே.ரெங்கராஜ், கிளைத் தலைவர் ரங்கநாதன், கிளைசெயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

உடுமலை அரசு மருத்துவ மனையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் மருத்துவமனையின் சுகாதாரப் பணிகளுக்கு 59 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நாளொன்றுக்கு ரூ.510 வீதம் தினக்கூலியாக கணக்கிட்டு, மாதச் சம்பளம் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவ மனையில் மேலாளராக பணியில் இருப்பவர், எங்களது சம்பளக் கணக்கில் ரூ.13,000-ஐ வரவு வைத்துவிட்டு, அவர்கள் மூலம் ரூ. 6,000 முதல் ரூ. 7,000 வரை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இதை நாங்கள் கேட்டபோது, உங்களது சம்பளம் நாளொன்றுக்கு ரூ.7,000 மட்டும் தான் என்கிறார். இதை எதிர்த்துக் கேட்டால், வேலையை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டுகிறார். சிலரிடம் வேலையை நிரந்தரப்படுத்தி தருவதாகக்கூறி பணம் பெற்றுள்ளார்.கடந்த 3 ஆண்டுகளில் 59 தொழிலாளர்களில், ஒவ்வொரு தொழிலாளியிடம் மாதம் ரூ. 6,000 வீதம், 36 மாதங்களில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 44 ஆயிரத்தை கையாடல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில், எங்களது சம்பளம் ரூ. 510 என தெரியவந்தது. எனவே சுகாதாரப் பணியாளர்களின் மாதசம்பளத்தில் கையாடல் செய்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுதொடர்பாக விசாரிக்க திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உத்தர விட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x