Published : 24 Jun 2021 05:51 AM
Last Updated : 24 Jun 2021 05:51 AM
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் ரூ.140 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி சேர்த்து ரூ.166 மாத சந்தா அடிப்படையில் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 242 உள்ளூர் ஆபரேட்டர்கள் மூலம் 28,028 பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்காமல், ரூ.200, ரூ.250 கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன.
மேலும், தனியார் நிறுவன செட்டப் பாக்ஸ்களை பொருத்தினால், குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களைப் பார்க்க முடியும் என்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சிலர் தகவல்களைப் பரப்பினர். இதையடுத்து, பலர் தனியார் செட்டாப் பாக்ஸ்களுக்கு மாறி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மக்களின் விருப்பத்துக்கு மாறாக சில ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களில் சரிவர சிக்னல் வராது என்று கூறி, தனியார் நிறுவனங்களின் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை பொருத்தி வருகின்றனர்.
மேலும், தனியார் நிறுவனங்களுக்கு மாறுமாறு மக்களை வற்புறுத்தி வருகின்றனர். சந்தாதாரர்களின் அனுமதியின்றி அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை நீக்கிவிட்டு, தனியார் செட்டாப் பாக்ஸ்களை நிறுவுபவர்கள் குறித்து 044-27230363 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT