Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த பலத்த மழையால் திருவையாறு அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
திருவையாறு அருகே உள்ள மருவூர் கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், அவரது மகள் தேவகி(45), மருமகன் சுப்பிரமணி ஆகிய மூவரும் தங்களின் தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் தொடங்கி 4 மணி வரை பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக, கல்யாணசுந்தரத்தின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி தேவகி உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த தேவகியின் கணவர் சுப்பிரமணி, தந்தை கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸார் இடிபாட்டில் கிடந்த தேவகியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து மருவூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT