Published : 24 Jun 2021 05:53 AM
Last Updated : 24 Jun 2021 05:53 AM

வேலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் தடுப்பூசி நிரந்தர முகாம் : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஏற்கெனவே நடந்து வருகிறது. தினசரி 5 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 438 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, கரோனா தடுப்பூசிகள் 17,880 டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இது தவிர கூடுதலாக 10 ஆயிரம் தடுப்பூசிகள் வரவுள்ளன. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முன்னுரிமை பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளன.

அதேபோல, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிரந்தரமாக தடுப்பூசி முகாம்கள் வேலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூர் மாநகராட் சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி, வேலூர் ஜெயராம் செட்டி தெரு  ஜெயின் சங்கம் ஹரிஹந்த் தடுப்பூசி மையம், காட்பாடி டான்போஸ்கோ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, வேலூர் ஊரீசு கல்லூரி வளாகம் என 4 முகாம்களும், குடியாத்தம் நகராட்சி சந்தைப்பேட்டை சமுதாயக்கூடம், குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி என 3 முகாம்களும், பேரணாம்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் ஒரு முகாமும், அணைக்கட்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஒரு முகாமும், கே.வி.குப்பம் சந்தைமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு முகாமும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒரு முகாமும் என 6 இடங்களில் நிரந்தர முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே, பொதுமக்கள் அரசால்வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்து கரோனா தடுப்பூசி போடாத வர்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x