Published : 21 Jun 2021 03:14 AM
Last Updated : 21 Jun 2021 03:14 AM

அபயரண்யம் பகுதியில் கராலில் இருந்தபடியே - மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் காட்டுயானை சங்கர் : கும்கியாக மாற்ற பயிற்சியளிக்க வனத்துறையினர் திட்டம்

முதுமலை

பழக்கும் விதத்திலும், பழகும் விதத்திலும் காட்டு யானையும் கனிந்து விடும் என்பதற்கு உதாரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரைகொன்ற காட்டு யானை சங்கர், வளர்ப்பு யானையாக மாறி, மனிதர்களோடு நெருங்கிப் பழகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்தில் தாயை பிரிந்துதவிக்கும் குட்டிகள் மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை இம்முகாமுக்கு கொண்டு வந்து வளர்ப்பு யானைகளாக மாற்றுவது வழக்கம். தற்போது 28 வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

சாதுவாகும் ஆக்ரோஷ யானைகள்

முதன்முதலாக தெப்பக்காடு முகாமுக்கு வரவழைக்கப்பட்டது, தந்தமில்லாத மக்னா யானை. இந்த யானை, கேரளாவில் 17 பேரை கொன்றுள்ளது. இந்த யானையை சுட்டுக்கொல்ல கேரள வனத்துறை உத்தரவிட்டது. அப்போது முதுமலை சரணாலய காப்பாளராக இருந்த உதயன் தலைமையிலான வனத்துறையினர், யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு வந்து, கரால் எனப்படும் மரக்கூண்டில்அடைத்து வைத்து பழக்கப்படுத்தினர். தற்போது வளர்ப்பு யானையாக மாற்றப்பட்டு, மூர்த்தி என பெயர் சூட்டப்பட்டு, வனத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பந்தலூர் அருகே மூவரை கொன்ற யானை, சீனிவாசன் என்ற பெயரில் கும்கியாக மாற்றப்பட்டுள்ளது.

அமைதியான சங்கர்

கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கரை பிடிக்க மயக்க ஊசி செலுத்திய நிலையில், பிற காட்டு யானைகளுடன் சேர்ந்து, கேரள வனத்துக்கு சென்றது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நீலகிரி மாவட்ட வனப்பகுதிக்கு திரும்பிய யானை சங்கர், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி பிடிபட்டது.

அன்றுமுதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் பகுதியில் அமைக்கப்பட்ட மரக்கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, பாகன்களின் கட்டளைகளுக்குப் பழகி, இப்போது அவர்களிடம் தும்பிக்கையை நீட்டி, கரும்புகளைக்கேட்டு வாங்கி உண்ணும் அளவுக்கு பழகியுள்ளது. யானையை, சோமன், பிக்கி என்ற தம்பதி பராமரித்து வருகின்றனர். யானை சங்கரை விரைவில் விடுவித்து, கும்கியாக மாற்ற பயிற்சிகள் அளிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x