Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM
நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். விவசாயத்தை சார்ந்து கால்நடைகளையும் வளர்த்து விவசாயிகள் வருவாய் ஈட்டி வருகின்றனர். கிராமப்புறங்களின் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவசமாக கறவை மாடுகளை வழங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்க அரசு மூலம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆண்டுதோறும், மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இருமுறை கோமாரி நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஓராண்டுக்கும் மேலாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால், மாடுகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. உதகை, குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கக்குச்சி, தொட்டண்ணி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், ஒன்னதலை உட்பட பல கிராமங்களில் கறவை மாடுகளை கோமாரி நோய் தாக்கியுள்ளது.
கோத்தகிரி அருகே கக்குச்சிஊராட்சிக்கு உட்பட்ட தொட்டண்ணி கிராமத்தை சேர்ந்த மாடு வளர்க்கும்விவசாயி அர்ஜுணன் கூறும்போது,
‘‘கடந்த ஒரு மாதமாக மாடுகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. இதனால், மாடுகளின் கால்கள், வாய், மூக்கு பகுதிகளில் கொப்புளங்களும், வாயிலிருந்து நுரையாகஉமிழ் நீரும் வெளியேறுகிறது. புண்களால் மாடுகள் புல் மேய்வதில்லை,தண்ணீர் குடிப்பதில்லை. இதனால், உடல் நலன் குன்றி மாடுகள் மெலிந்துள்ளன. நோய் தாக்குதல் காரணமாக பால் கறக்க முடிவதில்லை. கன்றுக்கு பால் கொடுக்க முடிவதில்லை. ஒரு மாடு தினமும் சுமார் 10 லிட்டர் பால் கறக்கும். நோய் தாக்குதல் காரணமாக பால் கறக்காமல் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி யுள்ளது" என்றார்.
தீர்வு காணவில்லை
விவசாயி செல்வமணி கூறும்போது, "உதகை, கூடலூர் எனஇரு வட்டாரங்களில், 28 கிராமங்களில் கால்நடை பரிசோதனை மையங்கள் உள்ளன. ஆனால், போதுமான அளவில் கால்நடை மருத்துவர்கள் இல்லை. பல மையங்களில் சிகிச்சைஅளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இப்பகுதியில் உள்ள பசு க்களுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளதால், பால் சுரப்பதில்லை. கால்நடைகள் மிகவும் சோர்ந்துஉயிரிழக்கும் நிலை உள்ளன.இதனால், தனியார் மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் பார்க்கிறோம். இதற்கு தினமும் ரூ.1000 வரை செலவாகிறது. மாவட்டநிர்வாகத்துக்கு புகார் அளிக்கப் பட்டுள்ளது. பல நாட்களாகியும் தீர்வு கிடைக்கவில்லை" என்றார்.
உயிரிழக்கும் நிலை இல்லை
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பகவத்சிங்கிடம் கேட்டபோது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளை கோமாரி தாக்கி வருகிறது.கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட வில்லை.
ஆனால், கால்நடைகள் உயிரிழக்கும் நிலையில் இல்லை. தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் முடிந்து தடுப்பூசி கிடைத்ததும், கால்நடைகளுக்கு செலுத்தப்படும். மாவட்டத்தில் 50 சதவீத கால்நடை மருத்துவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு மருத்துவர் இரு மையங்களை கவனிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT