முதுநிலை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு : தமிழ்நாடு விஏஓ சங்கத்தினர் வலியுறுத்தல்
முதுநிலை பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கிராம நிர்வாக அலுவலருக்கு கலந்தாய்வு நடத்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் புதிதாக பொறுப்பேற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு வழங்கினர்.
ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்காளர்கள் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் சொந்த செலவில் பந்தல் அமைத்துள்ளனர். அந்தத் தொகையை வழங்க வேண்டும். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ரூ.1,300 ஒதுக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அனுமதித்து முன்பணமாக ரூ.650 மட்டும் வழங்கப்பட்டது. மீதம் உள்ள தொகையை விரைவாக வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்தாய்வின் மாவட்ட முதுநிலை பட்டியலை அடிப்படையாக கொண்டுமட்டுமே கலந்தாய்வு நடத்த உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த திருக்கழுக்குன்றம் வட்டம், வசுவ சமுத்திரம் கிராமத்தில் பணிபுரிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் ஞானபிரகாசத்துக்கு அரசு சார்பில் பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
