Published : 20 Jun 2021 03:13 AM
Last Updated : 20 Jun 2021 03:13 AM
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர். பின்னர், சமூக நலன்மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.
விழாவில் பேசிய அமைச்சர் நாசர், “திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. பூந்தமல்லி வட்டத்தில் சுமார் 1.24 லட்சம் மக்கள் தொகையின் மருத்துவ தேவைகளுக்காக பூந்தமல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற அரசின் ஆணையின்படி, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், பாரிவாக்கம் ஊராட்சியில் உள்ள 3 கிராமங்களில் வசிக்கும் 57 ஆயிரம் மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்ய 18 மருத்துவர்கள் உட்பட மருத்துவ பணியாளர்களை நியமித்து மகப்பேறு, குழந்தைகள் நலன், வளர் இளம் பருவ பெண்கள் நலன், நாய்க்கடி சிகிச்சைகள், விபத்து சிகிக்சைகள், இசிஜி பரிசோதனை வசதிகளுடன் கூடிய அனைத்து சிகிக்சைகளையும் மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.
விழாவில், 79 பயனாளிகளுக்கு ரூ.20.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகளில், பூந்தமல்லிதொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, துணைத் தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெயக்குமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) செ.ராஜராஜேஸ்வரி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மருத்துவர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT