Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

பாசன தேவைக்காக 16 நாட்களுக்கு - ஆண்டியப்பனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு :

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த். அருகில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் இருந்து பாசன தேவைகளுக்காக 16 நாட்களுக்கான தண்ணீரை வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரே நீர்த்தேக்க அணையாக ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்க அணை உள்ளது. ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகும் பெரியாறு மற்றும் கொட்டாறு ஆகிய இரண்டு ஆறுகளையும் இணைத்து ஆண்டியப்பனூர் கிராமத்துக்கு அருகே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப் பட்டு 2007-ம் ஆண்டு முடிக்கப் பட்டது. அணையில் இருந்து வெளி யேறும் தண்ணீர் குரிசிலாப்பட்டு அணைக்கட்டில் இருந்து பாம்பாற்றில் இணைந்து பிறகு பெண்ணையாற்றில் கலக்கிறது.

5,025 ஏக்கர் பாசன வசதி

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த் தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. நீர்த் தேக்கத்தின் நீர்வடிநில பகுதி 20.39 சதுர மைல் பரப்பளவு முழுவதும் ஜவ்வாது மலைச் சரிவில் அமைந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பரப்பு 216.5 ஏக்கராகும். இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குரிசிலாப்பட்டு அணைக்கட்டு வழியாக ரீட் சாஹிப் வரத்துக் கால்வாய் மூலமாக 9 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, 2 ஆயிரத்து 55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கால்வாய்கள் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புன்செய் நிலமும், ஏரிகளின் மூலமாக 2 ஆயிரத்து 55 ஏக்கர் நன்செய் நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்தால் ஆண்டியப்பனூர் இருணாபட்டு, குரிசிலாபட்டு, சின்ன சமுத்திரம், வடுக முத்தம்பட்டி, கூடப்பட்டு, மாடப் பள்ளி, கனமத்தூர், திருப்பத்தூர், செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுப்பம், ராச்சமங்கலம், பசலிகுட்டை உள்ளிட்ட 14 கிராமங் கள் பயன்பெறுவதுடன் நிலத்தடி நீராதாரமும் பாதுகாக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ‘நிவர்’ புயல் மற்றும் தொடர் மழை காரணமாக அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறியது.

இந்நிலையில், ஆண்டியப் பனூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேவராஜ் (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் டி.எம்.கதிர்ஆனந்த் பேசும்போது, ‘‘ஆண்டியப்பனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 25 ஏக்கர் நிலங்கள் பயனடைவதுடன் 9 ஏரிகளுக்கு நீர்வரத்து இருக்கும். பிரதான கால்வாயில் 10 கன அடியும், ஆற்றுப்படுகையில் 30 கன அடி என மொத்தம் 40 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon