Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், 7 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று முன்தினம் கல்லணையை வந்தடைந்து. இதையடுத்து நேற்று காலை கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி திருச்சி சிவா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், சாக்கோட்டை க.அன்பழகன், டிகேஜி.நீலமேகம், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், எம்.எச்.ஜவாஹிருல்லா, பூண்டி கலைவாணன், டிஆர்பி.ராஜா, ஆட்சியர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), சிவராசு (திருச்சி), பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.
10 நாளில் கடைமடை செல்லும்
பின்னர் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது காவிரி, வெண்ணாற்றில் விநாடிக்கு தலா 2 ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தலா 500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தூர் வாரும் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. தண்ணீர் அந்த பகுதிக்கு செல்வதற்குள் மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு விடும்.
குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் ரூ.11,500 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட உள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT