Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 80 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை நேற்று மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்து வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி வத்சன், சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், குடும்பநலத் துறைக்கான துணை இயக்குநர் இளங்கோவன், பொதுப்பணித் துறை (கட்டிடம்) உதவி பொறியாளர்களான சோமசுந்தர், மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, உள்ளாட்சி அமைப்புகளில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் 2,100 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு நோய் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் படுக்கைகள் 72 சதவீதமும், ஆக்சிஜன் இல்லா படுக்கைகள் 69 சதவீதமும், ஐ.சி.யு. படுக்கைகள் 44 சதவீதமும் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் 1,448 பேருக்கு கருப்பு புஞ்சை தொற்று உள்ளது. அதைத் தடுக்க 9,520 குப்பி தடுப்பு மருந்துகள் வரப்பெற்றுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1,890 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு என்ற நிலை மாறி தற்போது 400-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 17-ம் தேதி கரோனா வைரஸ் தொற்று சராசரியாக 100 பேரில், 23 பேருக்கு இருந்தது. தற்போது 100 பேருக்கு 4 பேருக்கு மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் 13 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 3 பேருக்கு மட்டுமே கருப்பு புஞ்சை தொற்று உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT