Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

13, 17-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த - எல்லைக் கல், அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு :

விருதுநகர்

ராஜபாளையம்- சங்கரன்கோயில் சாலையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லைக் கல் ஒன்றும், 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் சிற்பம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் அருகே கரிவலம் வந்தநல்லூரில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் பருவக்குடி கண்மாய் அருகே வைணவ எல்லைக் கல் மற்றும் அய்யனார் கற்சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தொல்லி யல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியருமான போ.கந்தசாமி கூறியதாவது:

பருவக்குடி கண்மாய் அருகே களப்பணியின்போது, அங்குள்ள வயலில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எல்லைக் கல் ஒன்றும், அருகேயுள்ள சூரியகாந்தி பயிரிடப்பட்ட நிலத்தில் 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யனார் கற்சிற்பமும் கண்டெடுக்கப்பட்டது.

எல்லைக் கல்லில் வைணவத்தை விளக்கும் பொருட்டு சங்கு, சக்கரம், நாமம் ஆகியவை நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமும், 2 அடி அகலமும் ஒரு அடி பருமனும் கொண்டதாக இந்த சிற்பம் அமைந்துள்ளது. சிற்பத்தின் மேற்பகுதி இடது ஓரத்தில் தமிழ் எழுத்துகளில் "பரு தரை குடி கால் ரு" என்று எழுதப்பட்டுள்ளது. வலது ஓரத்தில் மேற்பகுதியில் ம,ன என்ற ஓரிரு தமிழ் எழுத்துகள் காணப்படுகிறது.

இந்த எழுத்துகளை வைணவ நிலத்தை அடையாளப்படுத்து வதற்கான எல்லைக் கல் என்று எடுத்துக் கொள்ளலாம். சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கக் கூடிய பகுதியை தேவதானம் என்றும், வைணவ கோயில் களுக்கு தானமாக வழங்கக் கூடிய நிலங்களை திருவிடையாட்டம் என்றும் அழைப்பார்கள். அந்த வகையில் வைணவ நிலத்தை குறிக்கும் எல்லைக் கல்லில் ஊர் பெயரும் கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை சேர்வராயன் என்ற பெயரில் வழிபட்டு வருகிறார்கள்.

அருகே உள்ள சூரியகாந்தி தோட்டத்தில் உள்ள அய்யனார் சிற்பம் பூர்ணகலா, புஷ்கலா ஆகியோருடன் அமர்ந்த நிலையில் பட்டைக் கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவிரி சடையுடன் அய்யனார் இடுப்போடு இணைந்த பட்டை ஒன்றில், இடதுகாலை மடக்கி மாட்டியுள்ளவாறும், வலது காலை சற்று கீழே தொங்கவிட்ட நிலையிலும், பூர்ணகலா மற்றும் புஷ்பகலா இருபுறமும் அமர்ந்த நிலையில் சிற்பம் காணப்படுகிறது.

இச்சிற்ப உருவ அமைப்பைக் கொண்டு 17 -ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கண்மாய்க் கரையை சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைத்தபோது அங்கிருந்த அய்யனார் சிற்பத்தை எடுத்து வைத்து வழிபட்டு வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். எனவே, இப்பகுதியின் வைணவத் தொடர்பை வரலாற்று ஆய்வுகள் மூலமாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x