Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM
பின்னலாடை நிறுவனங்களுக்கு 800 தடுப்பூசிகளை வழங்கிய விவகாரத்தில், தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூரில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றம் சாட்டியது.இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை தரப்பில் விசாரணை தொடங்கியது. தடுப்பூசி செலுத்தப்பட்ட மூன்று தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனையிடமும், மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக அண்ணா நெசவாளர்காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருந்தாளுநர் பாலமுருகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாநகராட்சி உயரதிகாரிகள் உத்தரவை மதித்து செயல்பட்ட ஒரு கடைநிலை ஊழியருக்கு, இந்த நிலையா என அரசு மருத்துவர்கள் மத்தியிலும் அதிருப்தி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சிலர் கூறியதாவது: அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருந்தாளுநர் மீது எவ்வித தவறும் இல்லை. அவர்தற்காலிக பணியாளராக பணியாற்றுபவர். கடந்த 5 ஆண்டுகளாக மருந்தாளுநராக இருந்து வருகிறார். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் என யாருமின்றி, அரசு மருத்துவரின் கவனத்துக்கு கொண்டுசெல்லாமல் தனியார் பின்னலாடை நிறுவனங்களில் தடுப்பூசியை மாநகராட்சி எப்படி மொத்தமாக ஒப்படைக்கலாம் என்பது தான், இதில் பிரச்சினை. இந்த நிலையில், தொடர்புடைய மாநகராட்சி அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயரதிகாரிகளின் உத்தரவுக்கு பணிந்து, அவர் வழக்கம்போல் பணி செய்துள்ளார். தடுப்பூசிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கச் சொல்லி அவரை அறிவுறுத்திய அதிகாரிகள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
திருப்பூர் மாநகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மாவட்ட சுகாதாரத்துறை தகவல்கள் அனைத்தும் மாநகராட்சிஆணையருக்கு தான் வரும். தற்போது திருப்பூர் மாநகராட்சிக்குபுதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும், பொறுப்பு ஏற்கவில்லை. அவர் பொறுப்புக்கு வந்த பிறகு தான், இது தொடர்பான தகவல்கள் தெரியவரும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT