Last Updated : 13 Jun, 2021 03:12 AM

 

Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

திருப்பூர் மாவட்டத்தில் 800 டன் சின்ன வெங்காயம் தேக்கம் : விலை சரிவால் விவசாயிகள் தவிப்பு

உடுமலை

ஊரடங்கு காரணமாக குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், உடுமலை, குண்டடம் பகுதிகளில் அறுவடை செய்து 60 நாட்களாகியும் விற்க முடியாமல் சுமார் 800 டன் சின்ன வெங்காயம் தேங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூர், குடிமங்கலம், மூலனூர், வெள்ளகோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு அறுவடை முடிந்து 60 நாட்களாகியும், உரியவிலை கிடைக்காததால் வெங்காயத்தை விற்க முடியாமல் விவசாயிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்டம், உகாயனூர் பகுதியைச் சேர்ந்த சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயி காளியப்பன் கூறியதாவது: பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 15 டன் விதைக்கான வெங்காயம் உற்பத்தியானது. ஒரு ஏக்கருக்கு ரூ.2,00,000 வரை செலவானது. கரோனா ஊரடங்குக்கு முன் கிலோ ரூ.55 வரை கொள்முதல்செய்யப்பட்டது.

தற்போது கேட்பாறின்றி உள்ளது. இருப்பு வைத்து விற்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடன், நகைக் கடன், உரக்கடன் என பல்வேறு இன்னல்களுக்கு நடுவே அறுவடை செய்தும்சின்ன வெங்காயத்தை விற்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது’ என்றார். இவரை போலவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள், வெங்காயத்தை விற்க முடியாமல் பட்டறையில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.

மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, ’விலை குறைவுக்கு கரோனா ஊரடங்கும் ஒரு காரணம். விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு தான். திண்டுக்கல் சந்தையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 மூட்டைகள் விற்பனையாகும். ஆனால் தற்போது 1000 மூட்டைகள் மட்டுமேவிற்பனையாகிறது. பணப்புழக்கமும் குறைந்துள்ளது. விவசாயிகள்,வியாபாரிகள் என அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘ திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் நிலவுகிறது. இருப்பு வைத்து விற்கமுடியாத சோகமும் உள்ளது. தற்போதைய சூழலில் சுமார் 500 முதல் 800 டன் இருப்பு உள்ளது. இதுகுறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x