Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

முளைப்புத் திறனை அறிந்து விதைநெல் வாங்க வேண்டும் : விவசாயிகளுக்கு விதை ஆய்வு துணை இயக்குநர் அறிவுரை

தஞ்சாவூர்

விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள, விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து விதைநெல்லை வாங்கி பயன்படுத்த வேண்டும் என தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: மகசூல் மற்றும் விளைபொருட்களின் தரத்தை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணியாக விதைகள் உள்ளன.

எனவே, தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விதைச் சான்றுத் துறை மற்றும் விதை ஆய்வுத் துறை அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனினும், சில பகுதிகளில் தரமற்ற விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அங்கீகாரமற்ற விற்பனையாளர்களிடமிருந்து விவசாயிகள் விதைகளை வாங்கி சாகுபடி மேற்கொள்வதும், ஒரு காரணமாக கூறப்படுகிறது. தரம் குறைவான கலப்பட விதைகளை விற்பனை செய்தால், விதைச்சட்டம் 1966-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டையில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகளும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது குறுவை பருவம் தொடங்கி உள்ளதால், நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் விதைநெல் வாங்கும்போது, சான்று பெற்ற விதைநெல்லை வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ அல்லது உரிமம் பெற்ற விதை விற்பனை கடைகளிலோ வாங்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும், விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து விதைநெல்லை வாங்க வேண்டும். அத்துடன் விதை கொள்முதல் ரசீதுகளில் உள்ள விதைகளின் பெயர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி தேதி ஆகிய விவரங்களையும் சரிபார்த்து விதைநெல்லை வாங்க வேண்டும்.

இந்த ரசீதுகளை அடுத்த பருவம் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடமிருந்து விதைநெல் வாங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x