Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலம் எல்லையோரத்தில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. சுமார் 11.50 மீட்டர் உயரமுள்ள அணையில் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து 4.50 கி.மீதொலைவில் உள்ள ஜிட்டப் பள்ளியில் பிக்-அப் அணை உள்ளது. இங்கிருந்து வலது மற்றும் இடது பிரதான கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இதில் வலதுபுற கால்வாய் வழியாக 12 ஏரிகள், 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,937 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இடதுபுற கால்வாய் வழியாக 7 ஏரிகள், 19 கிராமங்களில் உள்ள 4,227 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொது கால்வாய் மூலம் சுமார் 5 கிராமங்களில் 110 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 8,367 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, மோர்தானா அணை முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேற 10 செ.மீ அளவே பாக்கியுள்ளது. மோர்தானா அணையில் இருந்து பாசனத்துக் காக வரும் 18-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. முன்ன தாக, ஏரி கால்வாய் சீரமைப்புப் பணிகள் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் திறந்து விட்டதும் கால்வாய் கரைகளை சேதப்படுத்தினால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், ‘‘மோர்தானா அணை வரும் 18-ம் தேதி திறக்கப்படும் போது கடைமடை வரை உள்ள 18 ஏரிகளுக்கு எந்தவித சேதமும் இல்லாமல் அணையின் நீரை முழுமையாக கொண்டு செல்லும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், தண்ணீர் திருடும் வகையில் சட்ட விரோதமாக குழாய் பதித்தும், மோட்டார் பயன்படுத்தினால் அதை பறிமுதல் செய்து பொது ஏலத்துக்கு விடப்படும். பாசன கால்வாயை சேதப்படுத்தியும் குழாய் பதித்தும் மோட்டார் பொருத்துபவர்கள் மீதும் மதகின் ஷட்டர்களை உடைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT