Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
கல்லட்டி மலைப்பாதையில் தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த பஷீர் (55), அவரதுமனைவி பீபிஜான் (48). இவர்களுடைய மருமகன் அனிலூர் ரகுமான். இவர், நீலகிரி மாவட்டம் மாயாறு பகுதியில் மின்சார வாரியத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தங்கள் மகளைபார்ப்பதற்காக பஷீர், பீபிஜான் ஆகியோர் இ-பாஸ் பெற்றுக்கொண்டு, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வாடகைக் காரில், நேற்று காலை புறப்பட்டு, உதகை-கல்லட்டி மலைப்பாதை வழியாக வந்துள்ளனர்.
அப்போது, 21-வது வளைவு பகுதியில் வந்தபோது திடீரென பிரேக் பிடிக்காமல், தலைகீழாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தம்பதி உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கார்த்திக் (32), காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து தொடர்பாக புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.ராஜேஸ்வரி விசாரித்து வருகிறார்.
கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டதால், கடந்த 2019-ம் ஆண்டுமுதல் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் அவசர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
மசினகுடி கிராம மக்கள், வணிகர் சங்கம் மற்றும் ஓட்டுநர் சங்கம், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று சாலை சீரமைக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அன்றுமுதல், பல்வேறுவிபத்துகள் நிகழ்ந்த நிலையில்,முதல் உயிரிழப்பு நேற்று நடைபெற்றுள்ளதாக, சமூகஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT