Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
சிவகங்கை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த முறை செலுத்தியதைவிட பலமடங்கு கூடுதல் மின் கட்டணம் செலுத்துமாறு கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் மின் கணக்கீடு மேற் கொள்ளும் பணியை ஊழியர்கள் மேற்கொள்ளவில்லை. இதனால் ஜூன் 15-ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். மேலும் கடந்த 2019 மே மாதத்துக்குரிய மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அந்த தொகை கூடுதலாக இருப்பதாக கருதினால், மின் மீட்டர் ரீடிங்கை தாங்களே கணக்கெடுத்தோ (அ) புகைப்படம் எடுத்தோ சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளருக்கு அனுப்ப வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் நேற்று மின்கட்டணம் செலுத்த ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் மின் கட்டணம் செலுத்தியபோது, 2019-ம் ஆண்டின் மே மாதத்துக்கான மின் கட்டணத்தைச் செலுத்துமாறு மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் மின் கட்டணம் செலுத்த வந்தோர் கடைசியாக செலுத்திய மின் கட்டண தொகையுடனே வந்திருந்தனர். அவர்களிடம் இருந்த தொகையை விட மின் கட்டணம் 3 மடங்காக இருந்ததால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் மின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காமராஜர் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், ‘‘எனது வீட்டிக்கு கடைசியாக ரூ.3 ஆயிரம் செலுத்தினேன். ஆனால் தற்போது ரூ.8 ஆயிரம் செலுத்துமாறு கூறினர். மின் மீட்டார் ரீடிங்கை எடுத்து வந்து காட்டியும் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் வேறுவழியின்றி ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டியதாயிற்று’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT