Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய - கற்கால கருவிகள் கண்டெடுப்பு :

ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட பகுதி களில் கண்டெடுக்கப்பட்ட கற்கால கருவிகள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் 7 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய கற்கால கருவி கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரி யர் முனைவர் மோகன்காந்தி, காணிநிலம் முனிசாமி, குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி, வரலாற்று ஆர்வலர் வேந்தன், முனைவர் கோவிந்தராஜ் ஆகியோர் ஜவ்வாது மலையில் கள ஆய்வு மேற்கொண் டனர். அப்போது, கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறும்போது, ‘‘ஆய்வாளர்களால் அறுதியிட்டுக்கூற முடியாத பழமையான காலம் வரலாற்றுக்கு முந்தையை கற்காலம் என கூறப்படுகிறது. இந்த காலங் களில் மனிதன் நாகரீகம் அடையாமலும், இனக்குழுச் சமூகமாக விலங்குகளைப்போல சுற்றித்திரிந்துள்ளான்.

இரும்பு, செம்பு போன்றவற்றின் பயன்பாட்டை அறியாமல் கற் களையே ஆயுதமாகக்கொண்டு கற்களின் உதவியோடு வாழ்ந்த காலத்தைத் தான் கற்காலம் என்று அழைப்பார்கள்.

வரலாற்றுக்கு முந்தைய பல தொன்மையான சின்னங்கள் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ளது. அதில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் ஜவ்வாதுமலை யில் தற்போது அதிக அளவில் கிடைத்துள்ளன. கற்காலமனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள், கோடாரிகள் போன்றஅமைப்பினை பெற்று இருப்பதால் அவை கற்கோடாரிகள் என அழைக்கப்படுகின்றன.

ஜவ்வாதுமலைகளில் வாழ்ந்த தொன்மை மனிதர்களின் முக்கிய ஆயுதமாக கற்கோடாரிகளை கருத முடிகிறது. மரங்களை வெட்ட வும், விலங்குகளை வேட்டையாட வும் கற்கோடாரிகளை பயன்படுத்தி யுள்ளனர். ஜவ்வாதுமலைகளில் சிறிதும், பெரிதுமாக ஏராளமான கற்கோடாரிகள் உள்ளன. ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டுநாடு ஆகிய ஊராட்சி களுக்கு உட்பட்ட பல மலை கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் கற்கோடாரிகளை மக்கள் தெய்வங்களாக வழிப் பட்டு வருவது ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது.

புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட மலைச்சிற்றூர்களில் ஒன்றான பழையபாளையம் பகுதியில் உள்ள கோயிலின் வெளிப்புறம் உள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் அழகான மேடை அமைத்து அதில், 150-க்கும் மேற்பட்ட கற்கோடாரி கள் வரிசையாக நட்டு வைத்து அதை வழிப்பட்டு வருகின் றனர். சுமார் 7 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் வரலாற்று சிறப்புமிக்க இப்பொருட்களை மலைவாழ் மக்கள் தற்போது வரை போற்றி பாதுகாத்து வருவது சிறப்புக்குரியதாகும்.

புங்கம்பட்டு நாட்டுக்கு உட்பட்ட ஊர் கம்புக்குடி கிராமத்தில் மாரி யம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள மரத்தடியில் 25-க்கும் மேற்பட்ட வழவழப்பான கற்கோடாரிகள் உள்ளன. இவற்றை பிள்ளையார் என பெயரிட்டு இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல, புதூர்நாட்டில் இருந்து வடக்கே கம்புக்குடி செல்லும் பாதையில் 2 கி.மீ., தொலைவில் உள்ள ஆலமரத் தடியிலும் கீரைப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு 2 அடி முதல் 4 இன்ச் அளவுள்ள 50-க்கும் மேற்பட்ட கற்கோடாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதையும் பிள்ளையார் என இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் கற்காலக் கற்கோடாரிகள் ஆகும்.

புதூர்நாட்டில் இருந்து பெரும் பள்ளிக்கு செல்லும் சாலையில் கோயிலூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு பெருமாளப்பன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள தூண்களை பார்க்கும்போது இக்கோயிலானது சோழர் காலத்து கோயிலாக இருக்கலாம் என தெரிகிறது.

இக்கோயிலின் வலது புறம் ஏறத்தாழ 30 கற்கோடாரிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எண்ணெய் பூசப்பெற்று காட்சி தருகின்றன. இதுவும் கற்காலக் கருவிகளாகும். கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகள் ஜவ்வாதுமலைகளில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் கிடைக்கின்றன.

இவை அனைத்தும் இம் மலையின் பழமையை பறைச் சாற்றி நிற்கின்றன. இந்த மலையில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னோர்கள் பயன்படுத்திய கற்கோடாரிகளும், நடுகற்களும் வழிப்பாட்டில் இடம் பெறுவதால் பழமையான தடயங்கள் உயிர்பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனவே, மாவட்ட தொல்லியல் துறையினர் இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x