Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களுக்கு - ரூ.2.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் : எல் அண்டு டி, மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் ஆகியவை வழங்கின

எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக, எல் அண்டு டி மற்றும் மோபிஸ்இந்தியா பவுண்டேஷன் ஆகியவை ரூ.2.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை நேற்று வழங்கின.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தனியார் நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில், பழவேற்காடு அருகே உள்ள காட்டுப்பள்ளியில் செயல்படும் எல் அண்டு டி நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், பொன்னேரி அரசு பொதுமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக் கூடிய இம்மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

அதேபோல், தொடுகாடு மற்றும்நமச்சிவாயபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டுக்காக மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

இந்நிகழ்வில், நாசி வழியாக ஆக்சிஜன் செலுத்துவதற்கான இயந்திரம், சளியை உறிஞ்சி எடுப்பதற்கான இயந்திரம், தட்டணுக்களை எண்ணும் இயந்திரம், இதயதுடிப்பை கண்டறிவதற்கான இயந்திரம், நடமாடும் எக்ஸ்ரே இயந்திரம் உள்ளிட்ட ரூ.1.37 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மோபிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவன அதிகாரிகள், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோரிடம் வழங்கினர்.

இந்நிகழ்வுகளில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இயக்குநர் குருநாதன், இணை இயக்குநர் ராணி, பொன்னேரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) அனுரத்னா, ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x