Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM
ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி திருப்பூரில் செயல்பட்ட இறைச்சி, மீன் மற்றும் மளிகை கடைகளை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுபாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் ஒன்று. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 1104 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர். தொற்று பாதிப்புஅதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, கரோனா தடுப்பு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்கள் நிறைந்ததிருப்பூரில், ஞாயிற்றுக்கிழமை களில் இறைச்சி, மீன் கடைகளில்அதிக அளவில் கூட்டம் இருக்கும். தற்போது ஊரடங்கு நாட்களிலும் திருப்பூரில் ஆங்காங்கு கடைகளில் ரகசியமாக இறைச்சி, மீன் விற்பனைநடைபெற்று வந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எளிதில் கண்காணிக்க முடியாத பகுதிகள், தெருக்களில் இறைச்சி, மீன் வியாபாரம் மற்றும் காய்கறி வியாபாரம் என்ற பெயரில் கடைகளை திறந்து மளிகை வியாபாரம் நடைபெற்று வருவதாகவும், அதிக அளவில் பொதுமக்கள் கூடியுள்ளதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட கொங்கு பிரதான சாலை, பெருமாநல்லூர் சாலை, கணக்கம்பாளையம், வாவிபாளையம், ஊத்துக்குளி சாலை, ஏ.பி.டி. சாலை பகுதிகளில் கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில், வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி பகுதிகளில் செயல்பட்ட மீன், இறைச்சி கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது. மேலும், மளிகை உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்ட 8 கடைகளுக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, திருப்பூர் தெற்குவட்டத்துக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை, நீலி பிரிவு, பாரப்பாளையம், மீனாட்சிபுரம், கோழிப்பண்ணை, ஆண்டிபாளையம், சின்ன ஆண்டிபாளையம், குளத்துப்புதூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாட்சியர் சுந்தரம் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் அருள்உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி மளிகை உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்ட 7 கடைகளுக்கு ரூ.3,500 என மொத்தம் ரூ.26,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இன்னும்முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அதற்குள் இறைச்சி வாங்கவும், மீன் வாங்கவும் மக்கள் கூடுவது சரியானது இல்லை. இது தொற்று பரவலை மேலும் அதிகரிக்கவே செய்யும். ஊரடங்கு உத்தரவை மக்கள் மீறக்கூடாது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT