Published : 06 Jun 2021 03:12 AM
Last Updated : 06 Jun 2021 03:12 AM

கரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் - தோட்டக்கலைத் துறைக்கு ரூ.7 கோடி வருவாய் இழப்பு :

உதகை

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் 6 பூங்காக்கள், 13 பண்ணைகள் உள்ளன. இங்குள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, ரோஜா பூங்காக்கள் மூலமாக, அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் கிடைக்கிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படும் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.

ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவார்கள். இதனால், சுற்றுலா தலங்கள் களைகட்டும்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பால் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கோடை சீசனையொட்டி நடத்தப்படும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது. பூங்காக்களில் நுழைவுக் கட்டணம், கேமரா கட்டணம்ஆகியவற்றின் மூலமாக தோட்டக்கலைத் துறைக்கு வருவாய் கிடைக்கிறது. பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 நுழைவுக் கட்டணமாகவும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ்கூறும்போது, "தற்போது, முழு ஊரடங்கால் சீசன் ரத்து செய்யப்பட்டு உதகை அரசு தாவரவியல் பூங்கா உட்பட 5 தோட்டக்கலை பூங்காக்களுக்கும் சுற்றுலா பயணிகள் வராததால் தோட்டக் கலைத் துறைக்கு ரூ.7 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x