Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
மருத்துவர்கள் பரிந்துரைச்சீட்டு இன்றி குறிப்பிட்ட மருந்துகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. மீறினால் தொடர்புடைய மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்தக உரிமையாளர்களுக்கு, நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் அசித்ரோமைசின், ஐவர்மெக்டின், டாக்ஸிசைக்ளின், பாராசிட்டமால் ஆகிய மருந்துகளை விற்பனை செய்யும்போது, மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டை பெற்றுக் கொண்டு விற்பனை செய்யப்பட வேண்டும்.
உயிர் காக்கும் ஸ்டீந்துகள், வைரல் எதிர்ப்பு மருந்துகள் ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்புகளை சரியாகப் பராமரிக்க வேண்டும். மேற்கண்டமருந்துகளை விற்பனை செய்யும்போது நோயாளியின் பெயர், முகவரி,கைபேசி எண், மருத்துவரின்தகவல்களையும் சேகரித்து, மருந்து கட்டுப்பாட்டுத்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா தொற்றாளர்களுக்கு, தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் மருந்துகளை, மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்க வேண்டும்.
எந்நிலையிலும் மேற்கூறிய மருந்துகளை, பரிந்துரைச்சீட்டு இல்லாமல் விற்பனைசெய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, அதன் அடிப்படை விதிகள் 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT