Published : 03 Jun 2021 03:13 AM
Last Updated : 03 Jun 2021 03:13 AM

அயப்பாக்கத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 155 படுக்கைகள் : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்

அயப்பாக்கத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, மதுரவாயல் எம்எல்ஏ கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஆவடி அருகே அயப்பாக்கம் அம்மா திருமண மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்து, பார்வையிட்டார். அப்போது அவர், கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்துக்கு தனியார் நிறுவனம் சார்பில் ரூ.26.50 லட்சம்மதிப்பிலான 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியதோடு, 1,000 பேருக்கு முகக்கவசம், கபசுர குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும், அயப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 250 தூய்மை காவலர்களுக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி, சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் ஜவஹர்லால், பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, மதுரவாயல் எம்எல்ஏ கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அயப்பாக்கத்தில் 155 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 155 படுக்கைகளில் 35 படுக்கைகளுக்கு நேரடியாகஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளன, மீதமுள்ள படுக்கைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாயிலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் 25 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 847 படுக்கைகள் காலியாக உள்ளன. தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x