Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

விழுப்புரம் முக்தி நகராட்சி எரிவாயு தகன மேடையில் - உடல்களை எரிக்க கூடுதல் இயந்திரம் : அமைச்சர் பொன்முடி உத்தரவு

விழுப்புரத்தில் உள்ள முக்தி நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகத்தில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று முதன் முதலில் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி கண்டறியப்பட்டது. ஏப்ரல் 4-ம் தேதி முதன் முதலில் ஒருவர் உயிரிழந்தார். அதன் பின் இறந்தவர்களின் உடல்கள் விழுப்புரம் நகராட்சிக்கு சொந்தமான 'முக்தி'யில் தகனம் செய்யப்பட்டது.

இறந்தவர்களின் உடல்கள் முக்தி நகராட்சி எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்டது. இந்த எரிவாயு தகன மேடையை ரோட்டரிசங்கம் நிர்வகித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை எரிக்க வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முக்தி நிர்வாகம் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் வேறு வழியின்றி தற்போது உடல் ஒன்றுக்கு ரூ.3,100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக மாதத்தில் 60 உடல்கள் மட்டும் எரிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மே மாதத்தில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 114 பேர், கரோனா தொற்றிலிருந்து மீண்டு இணை நோய்களால் இறந்தவர்கள் 104 உட்பட 344 பேர் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. தினசரி குறைந்தது 7 உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதனால் வெளியாகும் புகையால் அருகாமை குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று முக்தி நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு இயந்திரம் மூலம் உடல்கள் எரியூட்டப்படுவதால் காலை 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்து எரிக்கப்படுகிறது. இதனால் அதிகளவில் புகை வெளியாகிறது என்று முக்தி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து உடல்களை எரிக்க கூடுதலாக ஒரு இயந்திரம் வாங்கி பொறுத்துமாறும், இதற்கான செலவை நகராட்சி நிர்வாகம் அளிக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், முக்தி நிர்வாகி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x