Published : 01 Jun 2021 03:13 AM
Last Updated : 01 Jun 2021 03:13 AM
வானூர், அதன் அருகில் உள்ள ஓட்டை, தைலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அங்கிருந்தோருக்கு கரோனா தடுப்பு அறிவுரைகளை ஆட்சியர் வழங்கினார். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து, வீட்டினுள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்; அருகாமையில் வசிப்பவர்களின் வீட்டிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு காலங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக வீடு வீடாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் பால், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பாக காய்ச்சல் முகாம் நடைபெறுவதையும், ஊராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்கிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றியவர்களை கண்டித்த ஆட்சியர், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கரோனா தனிமை சிகிச்சை பிரிவை ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அங்குள்ள நோயர்களிடம் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் கண்டமங்கலம் பகுதியில் அரசு விதித்துள்ள ஊரடங்கு விதிகளை மீறி திறந்து வைத்திருந்த கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி அஜய்தங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT