Last Updated : 29 May, 2021 03:12 AM

 

Published : 29 May 2021 03:12 AM
Last Updated : 29 May 2021 03:12 AM

காண்டூர் கால்வாயில் 1,150 கனஅடி தண்ணீர் திறப்பு எப்போது? : புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

உடுமலை

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

காண்டூர் கால்வாய் மூலம்பெறப்படும் தண்ணீர், திருமூர்த்திஅணையில் தேக்கி வைக்கப்பட்டு,பிரதான கால்வாய் மூலம் பாசனத்துக்காக திறக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் பருவமழைகாலங்களில் பிஏபி தொகுப்பணைகளில் நிரம்பும் நீர், பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணையை வந்தடைகிறது.

காண்டூர் கால்வாயில் விநாடிக்கு1,150 கனஅடி தண்ணீர் திறக்கும் நோக்கில், பல கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முழுமை பெறாததால், அதிகபட்சமாக விநாடிக்கு 850 கனஅடி தண்ணீரை மட்டுமே திறக்கக்கூடிய சூழல் உள்ளது.

இதுகுறித்து பிஏபி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் விவேகானந்தன் கூறும்போது ‘‘புதுப்பிக்கப்பட்ட நீரியல் கணக்கீடு விவரத்தை விவசாயிகளுக்கு அளிப்பதோடு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகளை விரைந்துமுடித்தால், காண்டூர் கால்வாயில் இருந்து விநாடிக்கு 1,150 கனஅடிதண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. அதனால் ஒவ்வொரு மண்டலத்துக்கும் 10-12 சுற்றுக்கு தண்ணீர் விநியோகிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக 5 சுற்றுகள் மட்டுமே விநியோகிக்கப்படும் பரிதாப நிலை உள்ளது. காண்டூர் கால்வாய் பராமரிப்புப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பிஏபி அதிகாரிகள் கூறும்போது, ‘‘காண்டூர் கால்வாயில், நல்லாறு பகுதியில் 6 கி.மீ. தொலைவுக்கு கரையை பலப்படுத்த வேண்டியுள்ளது. சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தில் ஜூன் 1- ம் தேதி முதல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. பணிகள் முடிந்ததும், காண்டூர் கால்வாயில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. வருவாய்த் துறை மூலம் வணிகப் பயன்பாட்டில் உள்ள நிலங்கள் குறித்தும் விசாரிக்கநடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x