Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
திருப்பூர் 15-வேலம்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர், கரோனா தொற்றுக்காக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். இவரது சடலத்துக்கு பதிலாக, கரோனா தொற்றால் உயிரிழந்த பாலமாணிக்கம் (63)என்பவரது சடலத்தை மாற்றி பாலசுப்பிரமணியத்தின் உறவினர்களிடம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளர்கள் ஒப்படைத்தனர். இதுதெரியவந்ததால், பாலசுப்பிரமணியத்தின் சடலத்தை அவரது உறவினர்கள், பிணவறையில் தேடிப்பார்த்தனர்.
அப்போது அவரது சடலத்தை, உயிரிழந்த பாலமாணிக்கத்தின் உறவினர்களுக்கு மாற்றித் தந்ததும், அவர்கள் ஏற்கெனவே சடலத்தை தகனம் செய்ததையும் அறிந்து பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்பேரில் திருப்பூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளர்களிடம், தெற்கு வட்டாட்சியர் சுந்தரம், தெற்கு காவல் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக தெற்கு வட்டாட்சியர் சுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அருகில் செல்லாமலேயே அவர்களது உறவினர்கள் பார்த்ததால், இதுபோன்ற குழப்பம்ஏற்பட்டுள்ளது. பாலமாணிக்கத் தின் சடலம் தொடர்புடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டு, முறைப்படி தகனம் செய்யப் பட்டது. சடலத்தை மாற்றி வழங்கியதால், வாரிசு மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது எனஉறுதி கொடுத்து, அதற்கான பணிகளையும் அரசு மருத்துவமனையில் செய்துகொடுத்தோம். இதையடுத்து, பாலசுப்பிரமணியத்தின் தரப்பினர் சமாதானம் அடைந்தனர்’’ என்றார்.
பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் கூறும்போது ‘‘அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளர்கள் கூடுதல் கவனத்துடன் பணியாற்றி, சடலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலட்சியத்தால், எங்களைப்போல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT