Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

மூத்த குடிமக்களுக்கு உதவ காவலர்களுக்கு உத்தரவு :

கோவை / உதகை

கோவை மாநகரில் காவல்துறையினர் ஊரடங்கு கண்காணிப்பின் போது, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் வெளியிட்டுள்ள உத்தரவு:

ரோந்து செல்லும் காவலர்கள், தங்கள் பகுதியில் உள்ள மூத்தகுடிமக்களின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவ்வப்போது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு தேவையான உதவிகளை நிறைவேற்ற வேண்டும். காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வீடுகளிலேயே டெலிவரி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

சாலையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்கள் போன்றஉதவிகளை செய்ய முன்வரும் நபர்களை தொந்தரவு செய்யாமல், அவர்களின் உண்மை தன்மையை விசாரித்து, காவல்உதவி ஆணையர் அலுவலகத்திலோ அல்லது மாநகர நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்திலோ ‘பாஸ்’ வழங்க வேண்டும்.அத்தியாவசிய தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் நபர்களை சரியான முறையில் விசாரித்து அவர்களை அனுமதிக்க வேண்டும். சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். காவலர் குடியிருப்பு களில் தள்ளுவண்டியில் காய்கறிகள் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். அனைத்து காவலர்களுக்கும் சுழற்சி முறையில் ஓய்வு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

உதகை

நீலகிரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் இரா.பாண்டிய ராஜன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், 1,020 கிராமங்களில் கிராமக் காவலர்கள் உள்ளனர். கிராமங்களில் கிடைக்கும் தகவல்களை சேகரித்து, காவல்நிலையங்களில் பராமரித்து வருகின்றனர்.

அதில், ஊர்களின் தலைவர்கள், முக்கிய நிகழ்வுகள், ஊரில் உள்ள முக்கிய நபர்களின் பெயர்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், வீட்டில்தனியாக இருக்கும் முதியோருக்கு தேவையான மருத்துவ உதவிகள், இதர உதவிகள் கிராமக் காவலர் மூலம் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவி தேவைப்படுவோர், கிராமக் காவலர்களின் செல்போன்எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 0423-2223828, 0423-2224837 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x